சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளார். சன்னியின் பெயரையே நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்தபோது, மேடையில் சுனில் ஜாக்கர் இருந்தார். பின்னர் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தங்கள் கட்சியில் டெல்லியில் உட்கார்ந்திருக்கும் சிலர், பஞ்சாபில் சீக்கியர் மட்டுமே முதல்வராக வேண்டும் என கட்சி தலைமைக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள் என்றார். பஞ்சாபில் இந்து முதல்வராக முடியாது என அம்பிகா சோனி தொடர்ந்து கூறி வருவதாகவும், ஆனால் பஞ்சாப் மக்கள் மதச்சார்பற்றவர்கள் என்றும் ஜாக்கர் தெரிவித்தார். இந்து ஒருவரை பிரதமராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது என்றால், பஞ்சாப் நிலைக்கு காங்கிரஸ் என்ன நிலை வைத்திருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முதல்வர் வேட்பாளருக்கான மற்றொரு போட்டியாளராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவும் கட்சியின் முடிவால் கடும் அதிருப்தியில் இருப்பதாக சுனில் ஜாக்கர் கூறினார். ராஜீவ் காந்திக்கு நெருக்கமாகவும், மக்களவை சபாநாயகராகவும் இருந்த பலராம் ஜாக்கரின் மகன் சுனில் ஜாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.