கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் மன நலன் சார்ந்த பயிற்சிகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 44 ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதற்கென ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆசிரியர் கட்டகம் மற்றும் மாணவர் கையேடு உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனுப்பிய கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது என்றும், அந்த ஆய்வை அடுத்து யுனிசெப் ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி மாணவர்களுக்கான கையேடு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சடித்துக்கொள்ளவும், ஆயிரம் ஆசிரியர்களுக்கு மனநிலை மற்றும் வாழ்வியல் சார்ந்த திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.