திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சந்தானகிருஷ்ணன். இவர் பிப்ரவரி 6-ம் தேதி இரவு 11 மணியளவில் தாராபுரம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களில் சிலர் சந்தானகிருஷ்ணனின் நண்பர் ஆனந்தனை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது அருகில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் தடுக்க முயன்றார். இதில் சந்தானகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நண்பர் ஆனந்தனை வெட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவலறிந்து பழனி நகர போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பழனி டி.எஸ்.பி.சத்யராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணனுக்கு தலையிலும், ஆனந்தனுக்கு வாயிலும் வெட்டப்பட்டு இருப்பதால் தொடர்நது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து பழனி போலீஸாரிம் விசாரித்தோம். “எஸ்.எஸ்.ஐ சந்தானகிருஷ்ணன் பணி முடிந்ததும், அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் நண்பர்களில் இருவர் சந்தானகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். எஸ்.எஸ்.ஐ கூறிய தகவல்களின் அடிப்படையில் தாக்கிவிட்டு தப்பிய இருவரையும் தேடி வருகிறோம்” என்றனர்.
Also Read: திண்டுக்கல்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; முன்னாள் காதலியின் திருமணத்தைத் தடுத்ததுதான் காரணமா?