புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் தெரிவித்துள்ளதாவது:
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் சென்னை, நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தளவாடங்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசின் மேக் இன்
இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் பல கொள்கை முன் முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சீர்திருத்தங்களைக் அரசு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை-2020-ன் கீழ் உள்நாட்டில் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.