Bigg Boss Ultimate new promo Julie crying: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கண்ணீர் விட்டு அழும் வகையில் வெளியாகி உள்ள ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று பெயர் பெற்ற விஜய் டிவி, ஹிட் ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களாக ஒளிப்பரப்பி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இப்போது தான் முடிவடைந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பால், விஜய் டிவி, இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களைக் கொண்டு பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதில் 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து சில போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் பிக் பாஸை போன்று பல்வேறு டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த சீசன்களில் தங்களுடைய பெயரை இழந்த போட்டியாளர்கள் மீண்டும் அதனை சரிசெய்து ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். இதனால் ஆரம்பமான முதல் நாளில் இருந்து அதிகளவில் சண்டை போட்டு வருவது எரிச்சலை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முதல் வாரத்தை கடந்துள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கு ‘உம் சொல்றியா அல்லது ஊகும் சொல்றியா’ என்ற புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த சக போட்டியாளர்களின் கேரக்டர் மற்றும் அவர்களின் பிடிக்காத கேரக்டரை கூறி வருகின்றனர். இதனால் அதிக சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில், தங்களுக்கு பிடிக்காத கேரக்டரை சொல்கிறேன் என்று சக போட்டியாளர்களின் மனதினை பலரும் காயப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே முதல்வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதும் அனிதா சம்பத், போர்டில் நீதி வென்றது என்று எழுதினார். இது தவறு என்று பாலாஜி முருகதாஸ் எடுத்துக் கூறியும், அனிதா என் மனதில் இருப்பதை நான் அப்படி தான் கூறுவேன் என்று விடாப்பிடியாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜூலி கண்ணீர் விட்டு அழுகிறார். இன்றைய ப்ரோமோவில், போட்டியாளர்கள் சக போட்டியாளர்களின் கேரக்டர் பற்றி கூறும் டாஸ்க்கில், வனிதா, ஜூலியை பற்றி கூறும்போது, நீ, நீயாக இருந்தாலே மக்கள் உன்னைப் புரிந்துக் கொள்வார்கள் என்கிறார். மேலும் போட்டியாளர்களில் சிலர் ஜூலியின் கேரக்டர் பற்றி பேச, அதைக் கேட்டு ஜூலி அழுகிறார். ஜூலி பற்றி போட்டியாளர்கள் அப்படி என்ன கூறினார்கள் என தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.