உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுவெளி பிரசார பொதுக் கூட்டங்களில் 30 சதவீதம் பேரும், உள்ளரங்க பிரசாரத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேரும் பங்கேற்கலாம். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 பேர் மட்டுமே செல்லலாம் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது. சைக்கிள், வாகன பேரணி, பாதயாத்திரை உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே உள்ள தடை நீட்டிக்கப்படுகிறது. இதேபோல், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலான பிரசாரத்துக்கான தடையும் நீட்டிக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.