பீஜிங் ஒலிம்பிக்;மாஸ்க் அணிந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க ஐஸ்-ஆக்கி விளையாடிய வீராங்கனைகள்!

பீஜிங்,
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் ஐஸ்-ஆக்கி போட்டியில் ரஷியா-கனடா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டி தொடங்கும் முன் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர சிறிது கால தாமதமானதால் போட்டி தாமதமாக தொடங்கியது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த போட்டியில் விளையாடிய இருநாட்டு வீராங்கனைகளும் கொரோனா பரவாமல் இருக்க ‘கே என்.95’ ரக மாஸ்க் அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது. 
சாதாரணமாக, மாஸ்க் அணிந்து கொண்டு நடந்தாலே, மூச்சு வாங்குகிறது என்று சொல்லிக்கொண்டு, மாஸ்க்கை மூக்குக்கு கீழும் தாடைக்கும் போட்டுக்கொண்டு உலா வரும் நம்ம ஊர் மக்கள் ஒருபுறம் இருக்க, கோல் அடிப்பதற்காக வியர்க்க விறுவிறுக்க 1 மணி நேரத்திற்கும் மேலாக ஓடி ஓடி விளையாடும் வீராங்கனைகள் மாஸ்க்கை அணிந்து கொண்டு பனியில் விளையாடியது நிச்சயம் பாராட்டுக்குரியது தான்.  
கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தி பின்பற்றி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக ஒலிம்பிக் நடைபெறும் பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது.  
ஒலிம்பிக்கில்  பங்கேற்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பை சீன அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. வீரர்கள் அனைவரும் பயோ-பபிள் எனப்படும் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கிறார்கள்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வி்ளையாட்டு போட்டிகள் நடைபெறும்  போது மட்டும் மாஸ்க் இல்லாமல் விளையாடலாம். அதனை தவிர்த்து எல்லா நேரமும்  முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.