ஈராக் நாட்டின் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், ஷியா முஸ்லிம் மதகுரு மொக்தாதா அல்-சதரின் சத்ரிஸ்ட் இயக்கம் 329 இடங்களில் 73 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக 25 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இதனால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், தொகுதிகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருவதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று காமிஸ் அல்-கஞ்சர் தலைமையிலான அல்-சியாடா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், சத்ரிஸ்ட் இயக்கமும், இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
அரசியல் குழுக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைப் புறக்கணித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை கூட்டத்தொடர் ஒத்திவைக்கும் சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.