புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் வாங்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயமாகியுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக அமைப்பை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக டிஜிட்டல் தெர்மோ மீட்டர், பிபிஇ கிட் ஆகியவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அளிப்பதற்காக நலவழித் துறையினர் மூலம் வாங்கி தேர்தல் துறைக்கு அளிக்கப்பட்டது.ஆனால் தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து இச்சாதனங்கள் நலவழித்துறைக்கு ஒப்படைக்கப்படவில்லை. சுமார் 30 லட்சம் பதிவிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாங்கிய பொருட்களை திருப்பி அளிக்காத தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீது அப்போதே உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போய் உள்ளது. எனவே, இதுகுறித்து அலட்சியமாக பணியாற்றியுள்ள தேர்தல் துறை, பொருட்களை ஒப்படைக்காத தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை செய்து இந்த காணாமல் போன பொருட்களுக்கான தொகைகளை வசூலித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர், தலைமைச்செயலர் ஆகியோரிடம் புதுச்சேரி தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் ரகுபதி மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.