மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 9-வது வார்டு பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தி விட்டதாக அ.தி.மு.கவினர் புகார் எழுப்பி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வாடிப்பட்டி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க போட்டியிடுகின்றன. இதில் 9-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணியை எதிர்த்து அதிமுக சார்பாக இந்திராணி போட்டியிடுகிறார்.
இந்த வார்டில் இருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக வெற்றி பெற்றால் கிருஷ்ணவேணிதான் மீண்டும் தலைவர் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், நேற்று முதல் அதிமுக வேட்பாளர் இந்திராணி காணவில்லை, அவர் குடும்பத்தினரும் ஊரில் இல்லை. அலைபேசியிலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இத்தகவல் கேள்விப்பட்டு அ.தி.மு.க மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே தங்கள் வேட்பாளரை மீட்டுத்தர வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று மாலை 3 மணி வரை வேட்புமனு திரும்ப பெறலாம் என்பதால், திமுக வேட்பாளரை போட்டியின்றி தேர்வு செய்யும் வகையில் தங்கள் கட்சி வேட்பாளர் இந்திராணியை கடத்தி திமுகவினர் மிரட்டி வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களும் காவல்துறையும் எடுக்கப்போகும் நடவடிக்கையை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.