வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அழைப்புகளைப் பெற முடியும் என்று தெரிகிறது.
‘மே 15 முதல் வாட்ஸ் அப் முழுமையாகச் செயல்பட, புதிய விதிகளை ஏற்க வேண்டும் என்று பயனர்களிடம் மெதுவாகக் கேட்க ஆரம்பிப்போம்’ என்று தங்களது கூட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சலை டெக்க்ரன்ச் என்கிற இணையதளம் வெளியிட்டுள்ளது.
அப்படி ஏற்காத நிலையில் அடுத்த சில வாரங்களில் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி புதிய செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாது. செயலியை வைத்திருந்தும் பயன்படுத்தாத பயனர்கள் தொடர்பான புதிய விதிகளும் மே 15-ம் தேதிக்குப் பிறகு அமலுக்கு வரும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இப்படியான பயனர்களின் கணக்குகள் 120 நாட்கள் செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் நீக்கப்படும் என்று புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் புதிய கொள்கைகளால் தாங்கள் அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை, அந்தரங்கம் குறித்து பயனர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தனிப்பட்ட உரையாடல்கள் அனைத்துமே பாதுகாப்பானவை. வாட்ஸ் அப் தரப்பு உள்ளிட்ட மூன்றாம் நபர் யாரும் இதைப் படிக்கவோ, கேட்கவோ முடியாது என வாட்ஸ் அப் கடந்த வாரம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தது.
வாட்ஸ் அப் புதிய கொள்கைகளை அறிமுகம் செய்ததிலிருந்தே அதைச் சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்தன. இதனால் இந்த விதிகள் அமல் ஆகும் தேதி மே 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேள்வி எழுந்தது. சமீபத்தில் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடந்தது.
“தங்கள் தனியுரிமை பறிபோவது குறித்து மக்களுக்குப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் 2 அல்லது 3 ட்ரில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு உங்கள் பணத்தை விட அவர்களின் தனியுரிமை முக்கியம். அதை நாம் காக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து வாட்ஸ் அப் மற்றும் அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.