வாட்ஸ் அப் கணக்குகளை கணிணி மூலம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கணிணியோடு தங்கள் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கும் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி வாட்ஸ் அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் உங்களது கணக்கை இணைக்க, க்யூ ஆர் கோட் (QR code) ஸ்கேன் செய்வதற்கு முன்னர், முகத்தையோ, விரல் ரேகையையோ அடையாளமாக வைத்து மொபைலை அன்லாக் செய்ய வேண்டும்.
இப்படி இணைக்கப்பட்ட பிறகு யார் கணிணியில் அந்தக் கணக்கை லாகின் செய்தாலும், குறிப்பிட்ட மொபைலில் அது குறித்த அறிவிப்பு செய்தி வரும். வேறு யாரோ இயக்குகிறார்கள் என்ற சந்தேகம் வந்தால், உடனடியாக கணிணியிலிருந்து வாட்ஸ் அப் கணக்கின் இணைப்பை துண்டிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தினால், வேறு யாரோ நமது வாட்ஸ் அப் கணக்கை கணிணியில், வெறும் மொபைலை மட்டும் வைத்து இணைக்கும் வாய்ப்பு குறையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய அப்டேட், வாட்ஸப் வெப் பக்கத்தின் புதிய தோற்றத்துடன், வரும் வாரங்களில் வெளியாகும்.
முகம் அல்லது விரல் ரேகை அடையாளப் பதிவு பாதுகாப்பான முறையில், பயனர்களின் மொபைல்களில் பதிவாகும் என்றும், இதை வாட்ஸ் அப் தரப்பால் பயன்படுத்த முடியாது, எனவே இது பாதுகாப்பனதே என்றும் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் டெக்ஸ்டாப் / வெப் மூலம் பயன்படுத்தும்போது, அதிலிருந்த மொபைல் எண்கள் கூகுள் தேடலில் பட்டியலிடப்பட்டிருந்தது சில வாரங்களுக்கு முன் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்தே இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்வதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது தனியுரிமைக் கொள்கைகளில் புதிய நிபந்தனைகளை கொண்டு வந்து அதனால் பெரும் சர்ச்சை வெடித்தது நினைவுகூரத்தக்கது.