காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளார் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி.
முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது.
இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கம் அளித்தது. அந்த விளக்க அறிக்கையை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தது.
ஆனால் அந்த அறிக்கை வெறும் கண் துடைப்பு எனக் கூறியுள்ளார் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹை ஹூண்டாய், எதற்கு இத்தனை மழுப்பல், நழுவல், கண் துடைப்பு வார்த்தைகள். இவை எல்லாம் தேவையில்லை. நீங்கள் மன்னிப்பு கோருங்கள். மற்றவையெல்லாம் அவசியமற்றது என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பாஜக எம்.பி. விஜய் சவுதாய்வாலே தனது ட்விட்டர் பக்கத்தில் ஹூண்டாய், இது போதுமானது அல்ல. பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனக் கருத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? இதுபோன்ற இந்திய எதிர்ப்புக் கருத்துகளில் உங்களின் சர்வதேச பார்வை என்ன என்றெல்லாம் விளக்கமாகக் கூறுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
ஹூண்டாய் விளக்கம் இதுதான்: ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. இந்திய தேசியவாத கொள்கையை மதிப்பில் நாங்கள் இதுவரை உறுதியுடன் இருக்கிறோம். ஹூண்டாய் பிராண்டுக்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். உணர்வற்ற சில கருத்து எங்கள் பெயரில் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் துணியும் சகிப்புத்தன்மை காட்ட மாட்டோம். @hyundaiPakistanOfficial வெளியான கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.