ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்காக மக்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக விழாவின் தேதிகள் ஒத்திவைக்கப்படுவது நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் வேதனையளிக்கிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இணையதளத்தில் புத்தக வலைப்பக்கம் தொடங்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இந்த ஆண்டின் சென்னை புத்தக கண்காட்சி முடிந்தவுடன் ஆன்லைன் புத்தக வலைப்பக்கத்தை தொடங்க உள்ளதாக கூறுகின்றனர்.
இதைப்பற்றி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பேசினோம், அப்போது BAPASIயின் செயலாளர் முருகேசன் கூறியதாவது:
“தமிழ் நாடு அரசு எங்கள் உறுப்பினர்களுக்கான ஆயிரத்தி ஐநூறு சதுரடியில் ஒரு பகுதி கன்னிமாரா நூலகத்தில் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டிலிருந்து இணையதளத்தில் புத்தக வலைப்பக்கம் ஒன்றை தொடங்கவிருக்கிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 130 பதிப்பகங்கள் எங்களோடு பங்குகொள்கின்றனர். வலைப்பக்கத்தில் விற்பனைக்கு வைக்கும் சூழ்நிலை, கிட்டத்தட்ட 75 விழுக்காடு சரி படுத்திவிட்டோம்; புத்தகங்களின் விலைகளை அந்தந்த பதிப்பகங்களிடம் சரிபார்த்துவிட்டு வலைப்பக்கத்தில் குறிப்பிட்டு கொண்டிருக்கிறோம்.
வலைத்தளத்தை வெளியீடும் கட்டம் வரும்பொழுதுதான் சென்னை புத்தக திருவிழா ஏற்பாடு செய்யும் வாய்ப்பு அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் வலப்பக்கத்தில் வெளியீட்டை ஒத்திவைத்திருக்கிறோம்”, என்று கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து BAPASIயின் பொருளாளர் குமரன் கூறியதாவது:
“கடந்த ஆறு மாதங்களாக இந்த வலப்பக்கம் தொடங்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது; அரசு நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை எடுத்து வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கின்றனர்; பதிப்பகங்கள் சரிபார்த்துவிட்டால் இதை வெளியீடலாம் என்ற முடிவில் தான் இருக்கிறோம்.
இதுவரை 50 பதிப்பகங்களிலிருந்து ஒப்புதல் பெற்றிருக்கிறோம், மீதமுள்ள பதிப்பகங்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்துகொண்டிருக்கிறோம்; இந்த திட்டம் முழுமையடைய தாமதம் ஆனாலும் முறையாக செய்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணுகிறோம்.
தற்போது கொரோனா பரவலின் காரணமாக சென்னை புத்தக கண்காட்சி பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் 6ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்காக நுழைவுசீட்டு பெரும் வசதியை ஆன்லைனில் உருவாக்கியிருக்கிறோம். இதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நடத்தப்படும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றை இந்த முறை சர்வதேச அளவில் நடத்தவிருக்கிறோம்”, , என்று கூறுகிறார்.
மேலும், ” கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வருகைத்தந்த வாசகர்கள், அங்கு விற்கப்பட்ட உணவுகள் சுகாதாரமாக இல்லை என்ற குற்றச்சாற்றை வைத்தனர்; அதை இந்த ஆண்டு தவிர்க்கும் விதமாக ‘அறுசுவை அரசு’ என்ற உணவகத்தை வரவழைப்பதற்காக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது; இந்தமுறை புத்தக கண்காட்சிக்கு வருகைத்தரும் மக்களுக்கு நன்கு பராமரிக்கப்பட்ட உணவுகள் வைக்கப்படும்.
கழிப்பறையை பொறுத்தவரை வருடத்திற்கு வருடம் மேம்படுத்திக்கொண்டு இருக்கிறோம், இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்களுக்காக இதை அமைக்கும்பொழுது குறைகள் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. அவற்றிற்கு மேலும் மேலும் அதிக கவனம் செலுத்தி அதற்கான பணிகளை செய்துவருகிறோம். கடந்த ஆண்டிலிருந்து நீர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக போர் போட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் வரும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்.
இந்த ஆண்டு 5,000 சதுரடியில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றுவதற்காக தமிழ்நாடு அரசுடைய தொல்லியல் துறை தங்கள் பங்களிப்பை அளித்திருக்கின்றனர். இந்த கண்காட்சியில் தமிழர்களின் தொன்மையான பொருட்கள் பலவற்றை காட்சிப்படுத்தும் விதமாக செயல்படுத்தியிருக்கிறார்கள். இது நிச்சயமாக மக்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்று முருகேசன் கூறுகிறார்.