டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லாவின் பங்குகள் 2.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனால் மஸ்க் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தார். தொடர்ந்து உலகின் 500 பெரும் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 191.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெஸோஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
கடந்த மாதம் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்ததால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. இதனால் அவர் முதலிடத்தைப் பிடித்தார். 700 பில்லியன் டாலர் என்கிற சந்தை மதிப்பை டெஸ்லா தொட்டது. இதன் மூலம் டொயோடா, வாக்ஸ்வேகன், ஹ்யூண்டாய், ஜிஎம், ஃபோர்ட் ஆகிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பையும் டெஸ்லா தாண்டியது. இதன் விளைவாக எலான்ஸ் மஸ்க்கின் சொத்து மதிப்பும் 150 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது. டெஸ்லாவின் பங்குகள் கடந்த வருடம் 743 சதவீதம் அதிகரித்தது.
கடந்த வாரம்தான் பிட்காயின் க்ரிப்டோ கரன்ஸியில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ததாக டெஸ்லா தரப்பு அறிவித்தது. இதனால் பிட்காயின் விலை அதிகமானது. ஒரு காயினின் விலை 50,000 டாலர்களைக் கடந்தது. எதிர்காலத்தில் தங்கள் பொருட்களை வாங்கும்போது பிட்காயினைக் கொடுத்தும் வாங்கலாம் என்றும் டெஸ்லா அறிவித்தது.
பிட்காயினுக்கு ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க் தற்போது, டாஜ்காயின் க்ரிப்டோகன்ஸி வைத்திருப்பவர்கள் தங்கள் காயின்களை விற்றால் அவர்களுக்கு முழு ஆதரவு தருவேன் என்று கூறியுள்ளார்.