இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 5ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில், 5ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கிடையே நாட்டின் 2-வது பெரிய டெலிகாம் சேவையாளரான பார்தி ஏர்டெல், குவால்காம் உடன் இணைந்து 5ஜி அலைக்கற்றையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான ஜியோ, சொந்தமாகவே 5ஜி அலைக்கற்றைப் பயன்பாட்டை உறுதி செய்துள்ளது. அலைக்கற்றை சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டதும், ஜியோ சார்பில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
5ஜி அலைக்கற்றை செயல்படத் தொடங்கிய உடன், இணைய வேகம் ஏற்கெனவே இருக்கும் இணைப்பின் வேகத்தை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.