நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி நிலையில், இது குறித்து விவாதிக்க கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டபேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இன்றைய சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.