அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் கூடிய ஒரு லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பல நாள்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தும் வருகிறது. அண்மையில் கூட அமெரிக்கா, உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் என்று ரஷ்யாவை மறைமுகமாக எச்சரித்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ஜோ பைடன், “ரஷ்யாவின் ராணுவ அச்சுறுத்தல் காரணமாக, முக்கிய தூதரக பணியாளர்களைத் தவிர மற்ற அனைத்து அமெரிக்கர்களும் உக்ரைனிலிருந்து வெளியேறிவிடுங்கள். அது தான் ராஜதந்திரம் கூட” என ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
Also Read: “நீங்கள் கூறுவது உண்மையெனில் படைகளை விலக்கிக்கொள்ளுங்கள்!”- ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை