கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில், சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் படம், பப்ளிக்.
ஏற்கெனவே படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அதில் பல தலைவர்கள் படங்கள் இருக்க, சிலர் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் அரசியல்வாதியான ‘அழகன்’ தமிழ் மணி ஒரு அழகியுடன் (கோமல் சர்மா) அமர்ந்திருக்கிறார். அவர், “நம்ம கட்சி பேர சொல்றேன்.. திருப்பிச் சொல்லு பார்க்கலாம்..” என்று சொல்லி, “அ…” என்கிறார்.
ஆனால் கோமல் சர்மாவுக்கு சொல்ல வரவில்லை. தவிர அவர், “இம்பாஸிபிள்..பி டயர்ட்” என்று அலுத்துக்கொள்கிறார்.
அதற்கு அரசியல்வாதி அழகன் தமிழ்மணி, “கட்சி பெயரையே சொல்லத்தெரியாத உனக்கு, எப்படித்தான் சீட் வாங்கித்தரப்போறனோ” என்று அலுத்துக்கொள்கிறார்.
“படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நிஜம். யார் மனதையாவது புண்படுத்தினால் நாங்கள் பொறுப்பல்ல” என்று ஏற்கெனவே இயக்குநர் ரா.பரமன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆகவே இந்த குறிப்பிட்ட காட்சியில் வரும் (நிஜ) அரசியல்வாதி, அந்த பெண் வேட்பாளர் ஆகியோர் யார், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.