ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினையும், காஞ்சிக்குடா தொடக்கம் பன்சேனை வரையிலான 6 கிலோமீற்றர் பிரதான வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த இரண்டு திட்டங்களையும் ஆரம்பித்துவைத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் சிபாரிசிற்கு அமைய நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக காஞ்சிரங்குடா கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஊடாக சுமார் 125 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக முதற்கட்டமாக மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, குருந்தையடிமுன்மாரி கிராமத்தில், பன்சேனை வரையான பிரதான வீதி நீண்டகாலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட சுமார் 6 கிலோ மீற்றர் வீதி, வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக 249 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் செப்பனிடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வை.சந்திரமோகன்,நீர்ப்பாசன நிலைய பொறுப்பதிகாரி நிர்மலன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.