பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடை சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் காண்பிக்கும் வலுவான பங்களிப்பை வரவேற்க வேண்டுமே தவிர, அதுகுறித்து எதிர்ப்பை வெளிக்காட்ட கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் நபர்களைக் கைது செய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 18 மாதங்கள் வரை தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்குமான வாய்ப்பை வழங்கக்கூடிய பயங்கரவாத தடை சட்டம் சித்திரவதைகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்குகின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கலாக பல சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.