லக்னோ :
நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்பதில் நான்குமுனை போட்டி நிலவிகிறது.
இதில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சமாஜ்வாடி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ்யாதவும், பகுஜன் சமாஜூகாக அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அந்தக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்காவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முதல் கட்டதேர்தல் நடைபெறும் 11 மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதையடுத்து 58 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் 623 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 2.27 கோடி வாக்காளர்கள் நாளை தீர்மானிக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்…
டெல்லியில் மூத்த குடிமக்களுக்கான இலவச ரெயில் புனித யாத்திரை மீண்டும் தொடக்கம்