ஸ்பேம் என்று சொல்லப்படும் மோசடி தொலைபேசி அழைப்புகள் பெறுவதில் உலக அளவில் இந்தியா 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. தற்போது பிரேசில் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மையான ஸ்பேம் அழைப்புகள் உள்நாட்டிலிருந்து வருபவையே. ஆனால், கடுமையான ஊரடங்கு விதிமுறைகளால் இப்படியான மோசடி அழைப்புகளைச் செய்பவர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை அல்லது அப்படியான அழைப்புகளைச் செய்யத் தேவையான கருவிகளை இயக்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.
ஆனால், கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்த ஸ்பேம் அழைப்புகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்களை அழைத்தோ, எஸ்எம்எஸ் அனுப்பியோ அவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திருடவே இந்த அழைப்புகள் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எப்படியாவது ஒருவர் எண்ணுக்கு வரும் OTP எண்ணைச் சொல்லவைத்து பணத்தைத் திருடுவதே இந்த அழைப்புகளின் நோக்கம். சர்வதேச அளவில் ட்ரூகாலர் மூலம் 145.4 பில்லியன் அடையாளம் தெரியாத அழைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் 310 கோடி அழைப்புகள் ஸ்பேம் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது கடந்த வருடத்தை விட 18 சதவீதம் அதிகம்.
கோவிட்-19 நெருக்கடி சர்வதேச மக்கள், பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் இப்படியான மோசடி செய்பவர்களையும் பாதித்துள்ளது.
உலக அளவில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக இருந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்பேம் விகிதம் மிகக் குறைந்த அளவில் இருந்திருக்கிறது. மே மாதத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்த ஸ்பேம் அழைப்புகள் மெதுவாக வேகம் பிடித்து, மாதத்துக்கு 9.7 சதவீதம் என்கிற அளவில் அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதம்தான் மிக அதிக அளவில் ஸ்பேம் அழைப்புகள் வந்துள்ளன. இது ஊரடங்கு காலத்துக்கு முன் இருந்ததை விட 22.4 சதவீதம் அதிகமாகும். ஸ்பேம் செய்பவர்கள் கோவிட் உலகத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு விட்டனர் என்று ட்ரூகாலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் 3 மாதங்களில், அவசர சேவைக்கு வரும் அழைப்புகள் எண்ணிக்கை 148 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.