கோட்டயம்: கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறினார்.
ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு பல்லுயிர் சமன்பாட்டைப் பேண உதவிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வாவா சுரேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ நாகம் தீண்டியது.
இதனால் அவர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணம் பெற வேண்டி மாநிலத்தில் பிரார்த்தனைக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. மறுபுறம், வாவா சுரேஷ் பாம்புகளை மீட்பதில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அவர் ஒரு தவறான முன்னுதாரணம். அவர், வனத்துறைக்கு எதிராக செயல்படுகிறார் என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பின.
இந்நிலையில் நேற்றிரவு (திங்கள் இரவு) வாவா சுரேஷ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அப்போது அவருடன் கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை அமைச்சர் விஎன் வாசவன் உடனிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய வாவா சுரேஷ், ”எனக்கு எதிராக சில வதந்திகள் பரப்பப்படுகின்றன. 2006ல் வனத்துறை ஊழியர்களுக்கு நான் பாம்பு பிடிக்க பயிற்சியளித்தேன். அப்போதெல்லாம் வனத்துறையில் பாம்பு மீட்பர்களே இல்லை. ஆனால் இன்று எனக்கெதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வனத்துறையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட அதிகாரி தான் இதை செய்கிறார். நான் அவரது பெயரை வெளியில் சொல்ல விரும்பவில்லை. பாம்புகளைப் பிடிக்க என்னை அழைக்கக் கூடாது என்று அவர் மக்களை அச்சுறுத்தி வருகிறார். என் உயிர் உள்ளவரை நான் பாம்புகளை மீட்பேன். இனி பாம்புகளை மீட்கும்போது இன்னும் அதிக கவனமாக செயல்படுவேன்” என்று கூறினார்.
சர்ச்சைக்குக் காரணமான வீடியோ: வாவா சுரேஷ் கோட்டயம் குறிச்சி பகுதியில் குடியிருப்பில் புகுந்த ராஜநாகத்தைப் பிடிக்கும்போதுதான் பாம்பால் தீண்டப்பட்டார். அவர் பாம்பை சாக்குப் பையினுள் நுழைக்க முயன்றபோது அது அவரது வலது தொடையில் தீண்டியது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதைப் பார்த்த சிலர் பாம்பு பிடிப்பதில் வாவா சுரேஷ் அலட்சியம் காட்டிவிட்டார். அறிவியல் முறைப்படி பாம்பு பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.