புதுடெல்லி: கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர்த்து, கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு முதலில் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக கோவின் இணைய தளத்தில் ஆதார் எண் கேட்கப்படும் என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில் இந்த விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமான் சர்மா கூறியதாவது:
அடையாள அட்டை ஏதும் பெறப்படாமல் இதுவரை 87 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “கரோனா தடுப்பூசி மையங்களில் ஆதார் எண்ணை கேட்டு பொதுமக்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பின்னர் கூறியதாவது: ஆதார் எண் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக பதிவு செய்யும்போது ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட், லைசென்ஸ் உள்ளிட்ட 9 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளித்து பொதுமக்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், மத்திய சுகாதார அமைச்சகம் கூறிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.