பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருவதுடன், அம்மாணவர்களின் செயலுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று காலை பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து அப்பெண்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. காவித் தூண்டு அணிந்த மாணவர்களின் செயல் ஏற்புடையது அல்ல என்றும், கல்லூரிகளில் வன்முறைக்கு இடமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Full video. pic.twitter.com/rUvjJZuThe
இந்த வீடியோவை காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டு, ”தனியாக வரும் ஓர் இளம் பெண்ணைக் குறிவைக்கும் இந்த ஆண்கள் எவ்வளவு தைரியமானவர்கள்… இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் பிரதானப்படுத்தப்பட்டு இயல்பாக்கப்பட்டுள்ளது. நாம் இனி பன்முகத்தன்மையைக் கொண்டாடும் தேசம் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ,கர்நாடகாவில் ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக் கொடி இருக்கும் இடத்தில் காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வன்முறையை தவிர்க்க சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு ஒரு வாரம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திர அரகா, ”மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அமைதியை குலைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.