புதுடெல்லி:
பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என பிப்ரவரி 5-ம் தேதியை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.
கடந்த 5-ம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா 2-வது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற முறையில் வெளியான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின், இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் தினம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஹூண்டாய் பாகிஸ்தானின் டுவிட்டர் பதிவு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை தென் கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், ஹூண்டாய் பாகிஸ்தானின் ஏற்றுக்கொள்ள முடியாத சமூக ஊடகப் பதிவுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹூண்டாய் இந்தச் சிக்கல்களை சரியான முறையில் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பற்றியது. இதில் எந்த சமரசமும் இல்லை என தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…மக்கள் மத்தியில் தி.மு.க. கூறும் ஒவ்வொரு பொய்யையும் உடைப்போம்- அண்ணாமலை