ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.
புது டில்லியில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணை நிற்கும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையின் மூலம் கையாளவும், IMBL (சர்வதேச கடல் எல்லைக் கோடு) சம்பவங்களைக் கையாள்வதில் வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரும் நீண்டகால ஒருமித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது”அதிகாரப் பகிர்வு” என்பது தமிழர்களின் நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய அம்சம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரி வரும் தமிழ் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.
1987ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.