திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமான ரதசப்தமி விழா இன்று அதிகாலை தொடங்கி நடந்து வருகிறது. காலை சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் எழுதருளிகிறார்.
கொரோனா விதிமுறை முன்னெச்சரிக்கையால் கோவிலுக்குள்ளேயே காட்சி தருகிறார். கோவில் வளாகத்தில் உலா வந்தார்.
இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்ச வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.
ரதசப்தமி விழாவில் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
ரதசப்தமி விழா அன்று மாடவீதிகளில் சாமி உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் குவிவார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக ரதசப்தமி விழா கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.