தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் அழிந்திடாமல் பாதுகாக்கவும், லட்சக்கணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடவும், மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வி கே சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் ஏற்கனவே தொடர் மழை, மூலப்பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் மிகவும் நலிவடைந்து வருவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி உற்பத்திக்கு எந்தவித வரிசலுகையும் அளிக்கப்படாததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில், 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 50 முழு இயந்திர தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண் தொழிலாளர்களே 90 சதவிகித அளவில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்கனவே தீப்பெட்டி உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருள்களான குச்சி, மெழுகு, பேப்பர், அட்டை. போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இத்தொழிலில் ஈடுபட்டுவரும் சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை செய்யமுடியாமல் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும், தீப்பெட்டி மூலப்பொருள்களுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி இருந்து வரும் நிலையில், தீப்பெட்டிக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதால், தீப்பெட்டி உற்பத்தி விலை அதிகமாகி மிகவும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். அதே போன்று, வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்யும் பொழுது தரப்படுகின்ற ஊக்கத்தொகை கடந்த காலங்களில் 7 சதவிகிதமாக இருந்ததை 1.5 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியும் மூன்று முதல் நான்கு மடங்கிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற காரணங்களால், தீப்பெட்டி உற்பத்திக்கான அடக்க விலை உயர்ந்துவிட்டதாகவும், ஆனால், அதே விற்பனை விலை தொடர்வதால், இத்தொழிலில் அதிகப்படியான நஷ்டம் ஏற்படுவதாக வேதனைப்படுகின்றனர்.
எனவே, தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் அழிந்துவிடாமல் தடுக்கவும், இதில் ஈடுபட்டுவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தீப்பெட்டி தொழிலுக்கு வரி சலுகைகள் அளித்து, தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட, மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.