அங்காரா,
துருக்கியில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,11,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் துருக்கியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,24,46,111 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 241 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,15,79,338 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,77,562 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக துருக்கி நாட்டின் அதிபர் தயீப் எர்டோகன் மற்றும் அவரது மனைவிக்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.