சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படையினர், நடத்தை விதிமீறல்கள் நடக்கிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதற்காக நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல், பிப்.19-ம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.28-ம் தேதி தொடங்கி, பிப்.4-ம் தேதி நிறைவடைந்தது. மாநகராட்சி வார்டுகளுக்கு 14 ஆயிரத்து 701 மனுக்கள், நகராட்சி வார்டுகளுக்கு 23 ஆயிரத்து 354 மனுக்கள், பேரூராட்சி வார்டுகளுக்கு 36 ஆயிரத்து 361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, மாநிலம் முழுவதும் உள்ள 1,644 உதவி தேர்தல் நடத் தும் அலுவலர் அலுவலகங்களில் கடந்த 5-ம் தேதி விறுவிறுப்பாக நடந்தது. முறையாக பூர்த்தி செய்யப்படாத, உரிய ஆவணங்களை இணைக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணிவரை வேட்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. மாற்று வேட்பாளராக மனு செய்திருந் தவர்கள், அதை திரும்பப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன. சில வார்டுகளில் ஒருவர் மட்டுமே மனு செய்திருந்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் பிரச்சாரம் சூடுபிடிக்க உள்ளது.
அத்துடன், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரடி பிரச்சாரத்தை தவிர்த்து காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் விதிமீறல்களை மாவட்ட அளவில் கண்காணிக்க 40 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார அளவில் நடக்கும் தேர்தல் பணிகளை கண்காணித்து மாவட்ட பார்வையாளர்களுக்கு தெரிவிக்க 697 வட்டார பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 4-ம் தேதி முதலே கண் காணிப்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
ஒரு மாநகராட்சி மண்டலத்துக்கு ஒரு பறக்கும் படை, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு செயல் குற்றவியல் நீதிபதி, 2 அல்லது 3 போலீஸார், ஒரு வீடியோகிராபர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பறக்கும் படைகள், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்வரை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் மாறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மொத்தம் 1,650 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 550 குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பறக்கும் படை குழுக்கள் மூலம் கடந்த 30-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ரூ.3 கோடியே 53 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள், ஐபோன்கள், புடவைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள், ரூ.16 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் என மொத்தம் ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நெருங்கும் வேளையில் பறக்கும்படை குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைதளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் கடந்த 27-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இப்புகார் மையங்களை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்ற மானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச்சாவடி களில் கூடுதல் பாதுகாப்புகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற் றும் காவல் கண்காணிப்பாளர் களுக்கு மாநில தேர்தல் ஆணை யர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தி யுள்ளார்.
பிரச்சாரம் 17-ம் தேதி மாலை யுடன் நிறைவடைகிறது. 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.