சென்னை: ‘நீட்’தேர்வுக்கு எதிராக சமரசமற்ற அகிம்சை போரை தொடங்கியுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதி செய்ய பரப்புரை மேற்கொள்ள வேண்டும்இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு என்னை நம்பி முதல்வர் என்ற பொறுப்பை ஒப்படைத்தனர். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒருநாளும் சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழக மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக் கிறேன்.
கரோனா 2-ம் அலையிலிருந்து காத்ததுபோல், நமது அரசு 3-வது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவை கடந்த பரப்புரைக் கூட்டங்களில் நான் பங்கேற்றால், அது கரோனா கால கட்டுப்பாடுகளுக்கு மாறானதாக அமைந்துவிடும். அதனால், நேரடி பிரச்சாரத்தை தவிர்த்து காணொலி வாயிலாக வாக்காளர்களை சந்திக்கிறேன்.
எதிரணியினர், சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்து இழிவுபடுத்துவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாக பேசுவார்கள். நமது குடும் பத்தை குறைத்துரைப்பார்கள். ‘வாழ்க வசவாளர்கள்’ என்ற நமது வழக்கமான அடிப்படையில்தான், நாம் செயல்படவேண்டும். பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, புது பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாது. எடுத்துக் கூற நம்மிடம் ஏராளமான சாதனைகள் உள்ளன. இதைத் தக்கபடி எடுத்துச் சொன்னாலே போதும். எக்காரணம் கொண்டும் தேவையில்லாததை சொல்ல வேண்டாம்.
புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் பார்வையிடும் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நமது செய்திகளை கச்சிதமாக பகிருங்கள். வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச் சதியை முறியடித்து, நம் சாதனையை பரப்புவோம்.
‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில், பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய காணொலி கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் பிப்ரவரி 17 வரை தொடர்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் ஊர்களில் இருந்தபடியே காணொலி கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவர்களிடம் திமுக அரசின் சாதனைகளை நெஞ்சுயர்த்தி எடுத்துரைக்க முடிகிறது. எதிர்க்கட்சியினர் பரப்பும் பொய்களை சுக்கு நூறாக நொறுக்கிட முடி கிறது. காணொலியில் முன்வைக்கும் கருத்துகளை அவரவர் வார்டுகளிலும், வீடு வீடாகச் சென்று, விளக்கமளித்து வாக்கு களை சேகரியுங்கள்.
அதில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில், சமூகநீதியை வெட்டிச்சாய்க்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சை போரினை தொடங்கியுள்ளோம். பிப்ரவரி 8-ம் நாள் (இன்று) கூட்டப்படும் சட்டப்பேரவைக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடி தமிழ் மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது லட்சிய பயணத்தின் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக அமைய, தொண் டர்கள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.