உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையால் ரூ. 4.90 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்கள் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி வரை ரொக்கப் பணம் ரூ. 3.53 கோடியும், மடிக்கணினிகள், ஐ போன்கள், துண்டு, பட்டுப் புடவைகள் உள்ளிட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான பொருட்களும், ரூ. 15.94 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.90 கோடி எனவும் மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.