இந்தியாவில் மாநில மொழிகளில் காணொலிகள் பார்க்க மக்கள் அதிகம் விரும்பும் தளமாக யூடியூப் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தி மொழிக் காணொலிகள் முதலிடத்திலும், தமிழ் மொழிக் காணொலிகள் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
கூகுளின் யூடியூப் தளத்தை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 32.5 கோடி பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர் என்றும், தொலைக்காட்சியை விட 4.8 மடங்கு அதிக தாக்கத்தை யூடியூப் ஏற்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இது பற்றிப் பேசியிருக்கும் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் சஞ்சய் குப்தா, “ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் யூடியூப் தளத்துக்குத் தங்களது தனித்துவமான விருப்பங்களைக் காட்ட, தனிப்பட்ட, மற்றவர்களுக்கு உதவும், பயனளிக்கும் படைப்புகளை உருவாக்க வருகிறார்கள்.
பல்வேறு வகைகளில், பல மொழிகளில், பல பகுதிகளுக்கு, பல வயதினருக்கு யூடியூப் தீனி போடுவதன் மூலம் மாநில மொழிகளில் காணொலிகள் பார்க்க மக்கள் விரும்பும் நம்பர் 1 தளமாக இருக்கிறது. இதில் இந்தி மொழி வீடியோக்கள் முதலிடத்திலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆங்கிய மொழிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தேசிய அளவில் எங்கள் வீச்சு எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது” என்று பேசியுள்ளார்.
ஜூலை மாதம் மட்டும் 2,500 புதிய சேனல்களும், புதிதாக 10 லட்சம் சந்தாதாரர்களும் யூடியூபில் இணைந்துள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட இது 45 சதவீத வளர்ச்சியாகும். மேலும், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக, இந்தியாவில், கேமிங் தொடர்பான காணொலிகள் பார்க்கப்படுகின்றன. அதே போல, அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் 3 மடங்கு அதிகமாக, பேக்கிங் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஊரடங்கு சமயத்தில் இணையக் கல்வி பரவலாகி வருவதால், வைஃபை ஸ்டடி என்கிற யூடியூப் சேனல் தான், ஆசிய பசிஃபிக் பகுதியில் யூடியூபில் அதிகப் பிரபலமாக இருக்கும் கல்வி சேனல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இதில் 1.2 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். 150 கோடி பார்வைகள் மொத்தமாக இந்த சேனலுக்குக் கிடைத்துள்ளது.