வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகளில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை நீக்கி தரும் கிராமர்லி மென்பொருளை உருவாக்கிய உக்ரைனைச் சேர்ந்த மூவர் இன்று பெரும் கோடீஸ்வரர்களாகியுள்ளனர். அவர்களது நிறுவனம் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மக்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். உக்ரைனும் அது போன்ற ஒரு நாடு தான். அங்கு பிறந்து அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் சென்ற மேக்ஸ் லிட்வின் மற்றும் அலெக்ஸ் சிவ்சென்கோ ஆகியோர் டிமிட்ரோ லைடருடன் இணைந்து உருவாக்கியது தான் கிராமர்லி எனும் மென்பொருள். ஆங்கில தகவல் தொடர்பை சிறப்பானதாகவும், மேம்பட்டதாகவும் மாற்றுவதற்கு, குறிப்பாக ஆங்கிலம் தாய் மொழியாக இல்லாதவர்களுக்கு அதில் எழுதுவதை சுலபமாக்க இம்மென்பொருள் உதவுகிறது.
ஆங்கிலத்தில் உரையை எழுதிவிட்டு கிராமர்லி மென்பொருளில் அவ்வுரையை பதிவேற்றினால், எங்கெல்லாம் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, தவறான வார்த்தை பிரயோகம் இருக்கிறதோ அதனை சுட்டிக்காட்டி திருத்தும். இலவச பயன்பாடும் இதில் உண்டு. அதிக வசதிகளுக்கு கட்டணமும் செலுத்த வேண்டும். தற்போது இம்மென்பொருள் ஆண்டுக்கு 14 லட்சம் கோடி வார்த்தைகளை அலசி ஆராய்கிறது. தினசரி சுமார் 3 கோடி பேர் இம்மென்பொருளை உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள். 2019ல் நிதி திரட்டும் நிகழ்வில் ரூ.15,000 கோடி என இந்நிறுவனம் மதிப்பிடப்பட்டது.
கோவிட்டிற்கு பிறகு அலுவலக வேலைகள் வீட்டிற்கு மாறியது. இம்மென்பொருள் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்தது. தற்போது இந்நிறுவன மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய். இதன் நிறுவனர்களான மேக்ஸ் லிட்வின் மற்றும் அலெக்ஸ் செவ்சென்கோ சொத்து மதிப்பு தலா ரூ.18,000 கோடி ஆகும்.
இது பற்றி கிராமர்லி நிறுவனர்களில் ஒருவரான செவ்சென்கோ கூறியதாவது: உலக அரங்கில் உக்ரைனை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மக்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தெரிவிக்க உதவும் நோக்கத்துடன் கிராமர்லியை நிறுவினோம். அதற்கு எங்களின் சொந்த அனுபவம் ஒரு காரணம். ஆங்கிலப் பூர்விகமில்லாத நாங்கள் அனுபவித்த சிரமங்களிலிருந்து தான் இத்திட்டம் தொடங்கியது. நிறுவனங்கள், தனிநபர்களுடனான தொடர்பு சிக்கல்களை தீர்ப்பது, புதிய சிந்தனைகளை கொண்டு வருவது தான் இதன் அடிப்படை, என கூறுகிறார்.
Advertisement