“40 ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக இருக்கும்போது நான் சொல்லிக்கொண்டிருந்த அதே அறிவுரைகள் இன்று கொள்கைகளாக மாறி இருக்கின்றன. நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. சமூக சேவகர்களைத் தேட வேண்டும். நமக்கு அவர்கள் சேவகம் செய்ய வேண்டும். அரசு, ஆட்சி என்பதை இருண்ட காலத்துக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறார்கள் இவர்கள். ஏழ்மையை இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நீக்க ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்”
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசிய வார்த்தைகள் இவை.
நடிகர் கமல்ஹாசனால் 2018 ஃபிப்ரவரியில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, இதுவரை ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. முதலில் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட நான்கு சதவிகித வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. தொடந்து, 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்தது மட்டுமல்லாமல், பல இடங்களில் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் அல்லாடியது.
இந்தநிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல். தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கணிசமான வேட்பாளர்களை அறிவித்தார். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாநகரட்சிகள் அதிகமாகவும் மற்ற நகராட்சி, பேருராட்சிகளில் கணிசமாகவும் என தமிழகம் முழ்வதும் 1,330 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
நேற்று சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரத்தையும் தொடங்கினார் கமல். சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில், தன் கட்சியின் சார்பில் போட்டியிடும், பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து வீதிவீதியாகப் பிரசாரம் செய்தார். தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், “நம்மிடம் இருப்பதும், எதிரிகளிடம் இல்லாததும் நேர்மைதான். இப்போது உங்களை கிண்டல் செய்வார்கள், ரெளடிகளைக் கொண்டு மிரட்டுவார்கள். துணிந்து செல்லுங்கள். நாளை உங்கள் முன் அவர்கள் தலைகுனிந்து நிற்பார்கள். நான் அரசியலுக்கு வந்திருப்பது பதவிக்காக அல்ல. தமிழ் நாட்டு மக்களுக்காக. கலைஞன் என்கிற பெரும் பதவியை ஏற்கனவே எனக்கு கொடுத்துவிட்டீர்கள். தேவைக்கு அதிகமாக பணத்தையும், புகழையும் கொடுத்துவிட்டீர்கள். என்னை பார்ட் டைம் அரசியல்வாதி என்கிறார்கள். வேறு வேலை தெரியாதவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்” என உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
Also Read: உருமாறிய மக்கள் நீதி மய்யம்… கைகொடுக்குமா கமல்ஹாசனின் புதிய திட்டம்?!
இந்தநிலையில், கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்தமுறை கமல்ஹாசன் தீவிரம் காட்டியிருப்பதன் பின்னணி என்ன?
கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்,
“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நாங்கள், 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தவறினோம். சட்டமன்றத் தேர்தலின்போது மக்களை எதிர்கொள்ளும்போதுதான் அதை உணர்ந்தோம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்திவிட்டு, தேர்தலில் போட்டியிடலாம் என்கிற எங்களின் எண்ணம் தவறானது. இதுபோன்ற தேர்தல்களையே கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம். அதனால்தான், எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களை வென்று அங்கு மக்கள் பணி செய்வதன் மூலமாக கட்சியை அடுத்தகட்டத்தை நோக்கி வளப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில் எங்களுடைய இலக்கு இதுதான்” என்றவர் தொடர்ந்து, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்,
“ ‘வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கடந்த காலங்களில் சிலரிடம் நம்பிக்கையாக சில தேர்தல் வேலைகளை ஒப்படைத்திருந்தேன். ஆனால், கட்சியின் நலனைவிட அவர்களின் நலன்தான் முக்கியம் என இருந்துவிட்டார்கள். போனது போகட்டும், இனி அப்படியொரு நிலை வரக்கூடாது. இந்தத் தேர்தலுக்குப்பிறகு நாம் நிச்சயமாக முன்பைவிட வலுவடைந்திருக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் நம் வாக்குவங்கி குறைந்துவிட்டது என்று வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இந்தத் தேர்தல் பதிலளிக்கும் வகையில் செயல்படவேண்டும்’ என்று அறிவுறுத்தினார்” என்கிறார் அவர்.