உலகின் பல்வேறு நாடுகளிலும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த போலியோ வைரஸை அளிக்க முடியாது. ஆனால், செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் போலியோவை ஒழிக்க ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வருடம் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்தது. பின்னர், வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த சொட்டு மருந்து முகாம்கள் ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியா போலியோ இல்லாத நாடக மாறியதற்கு இந்த சொட்டு மருந்து முகாம்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
Also Read: போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் – சிறப்பு பகிர்வு
ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் தொடங்கி மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் வரை பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமின்றி, மலைக் கிராமங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் நடமாடும் குழுக்கள் மூலம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் 75 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளைத் தமிழக சுகாதாரத்துறை செய்துவந்தது. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலிலிருந்தது. இதனால், ஜனவரி 23-ம் தேதி நடைபெறவிருந்த முகாம் இந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாநில அரசும் உறுதி செய்துள்ளது.