எகிப்திய திரைப்படமான ‘ஃபெதர்ஸ்’ வறுமைக்குள் பிழைத்துக் கிடத்தல் என்கிற உயிர்வாழ்வு பற்றிய கதை.
’அபத்தம்’, ’காமெடி’ ஆகிய வார்த்தைகள் மனித நிலையை நையாண்டி செய்யும் ஒரு வகை திரைப்படங்களை விமர்சிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுவது வழக்கம். எகிப்திய திரைக்கலைஞரான ஓமர் எல் ஜோஹேரியின் இந்தப் படைப்பு அதுபோன்ற வார்த்தைகளைப் பொய்யாக்கி, ஒரு சினிமா பற்றிய அனுமானங்களைத் தகர்த்துவிட்டது. ஆண்களால் நடத்தப்படும் உலகில் ஓர் ஏழைப் பெண் திடீரென்று அதீத துக்கத்துக்கு ஆளாவதைப் பற்றிய ஒரு துரதிர்ஷ்டவசமான படம் இது.
கதை இதுதான்…
தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு துணிச்சலான ஏழை மனிதன்… ஒரு நாள் அவன் ஒரு மந்திரவாதியால் கோழியாக மாறிவிடுகிறான். ஆனால், கோழியை மீண்டும் மனிதனாக்க முயற்சிக்கும்போது மந்திரம் பலிக்க மறுக்கிறது. அது மட்டுமல்ல… மந்திரவாதியும் மறைந்து விடுகிறான். அந்த வீட்டை நடத்தும் பொறுப்பு சட்டென அவனின் மனைவிக்கு வந்து சேர்கிறது.
எகிப்தின் அடையாளம் தெரியாத ஒரு மூலையில் உள்ள வறுமை, மிகக்குறைவான பிழைத்தல் வாய்ப்புகள் மற்றும் வெளிப்படையான பெண் வெறுப்பு ஆகியவை இந்தப் படத்தில் ஆழமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலையாள இயக்குனர் ஜி.அரவிந்தனின் ’கும்மட்டி’ படத்தில் ஒரு சிறுவன் போகியானால் நாயாக மாறியது ஒரு யதார்த்தமான விசித்திரக் கதை. ஃபெதர்ஸ் படத்திலோ இந்த மாற்றம் துல்லியமாகவும் தீர்க்கமாகவும் எதிர் திசையில் நகர்கிறது..
இயக்குநர் ஜோஹைரி பெரும்பாலும் தொழில்முறை அல்லாத நடிகர்களையே பயன்படுத்துகிறார். நீள்வட்டங்கள் மற்றும் மிகவும் இறுக்கமான ஃபிரேம்கள் நிறைந்த பாணியைப் பின்பற்றுகிறார். அவற்றில் சில மனித உடலையும், படமெடுக்கப்பட்ட இடங்களையும் துண்டாக்கி பகடைகளாக வெட்டுகின்றன. ஆஃப்-சென்டர் ஃப்ரேமிங், வழக்கத்துக்கு மாறான கலவைகள் மற்றும் தேய்ந்துபோன நீல-சாம்பல்-பழுப்பு தட்டு ஆகியவை காட்சிகளுக்கு மிருதுவான நெருக்கத்தைக் கொடுக்கின்றன. ஒரு தொடர்ச்சியான மையக்கருத்துக்கு படத்தில் வரும் விலங்குகளும் பங்களிக்கின்றன. அவை, வறுமையை பிரதிபலிக்கும் வகையில் அடிப்படை மிருகத்தனத்தின் உணர்வாக வெளிப்படுகின்றன.
படத்தின் பல காட்சிகள் வீட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசுப் படலத்தால் மூடப்பட்டிருக்கும் பொருள்கள், தேய்ந்து போன ஃபர்னிச்சர்களுக்கு மத்தியில் அந்தக் குடும்பம் வாழ்கிறது. வாடகையைச் செலுத்தவும், தன் குழந்தைகளுக்கு உணவளிக்கவும், கோழியாக மாறிய தன் கணவன் நன்றாக இருக்கவும் அந்தப் பெண் படாதபாடு படுகிறாள்.
கிரானைட் போல கடினமாகிப் போன முகத்தில் அவளது விரக்தியானது நம் கண்களுக்கு வெளிப்படுவதில்லை. ஆனால், அவளது செயல்களின் மூலமே அது பெருகிய முறையில் வெளிப்படுகிறது. படத்தில் பேச்சு குறைவாக இருந்தாலும், அதுவும் சிதைந்ததாகத் தோன்றினாலும், அந்தப் பெண் அச்சுறுத்தல் நிறைந்த அந்த வாழ்வில் கவனம் செலுத்துகிறாள்.
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இடம்பெற்ற ’ஃபெதர்ஸ்’ விமர்சகர் விருதை வென்றது. இந்த திரைப்படம் எகிப்தில் வறுமையை அலசி ஆராய்ந்ததற்காக சத்யஜித் ராயின் ’பதேர் பாஞ்சாலி’ போன்றே விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. ஆனால், இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாதவையாகவே இருக்கும்.
பிரதான பாத்திரத்தை ஏற்றுள்ள டெம்யானா நாசரின் நடிப்பு அபாரமாகப் பதிவாகியுள்ளது. பெண் என்ற காரணத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் துன்பப்படும் இவர் தலையைக் குனிந்துகொண்டு, ’ஒன்றும் இல்லை’ என்று சொல்லும்போதே எல்லாவற்றையும் அற்புதமாக வெளிப்படுத்திவிடுகிறார்.
விறுவிறுப்பாக இல்லையென்றாலும்கூட, இந்த 112 நிமிடத் திரைப்படத்திலிருந்து நீங்கள் எழுந்து செல்ல முடியாது என்பதுதான் இந்தப் படத்தின் பலம்.
WORLD CINEMA | Feathers | 2021 | Arabic | 112 min |