லக்னோ:
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு வருகிற 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 தினங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் பிஜோனுரில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பா.ஜனதா வேட் பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் உ.பி. பயணம் ரத்து செய்யப்பட்டது. அவரால் உத்தரபிரதேசத்துக்கு நேரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்துக்கு செல்ல முடியாவிட்டாலும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அவர் ஏற்கனவே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உ.பி.யில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
முன்னதாக பிஜோனுர் பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சியை கடுமையாக தாக்கினார்.