வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடர்
, கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று
பிரதமர் மோடி
பேசியதாவது:
நமது தவறுகளை திருத்திக் கொண்டு, புதிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இந்தியாவை முன்னெடுத்து செல்ல வேண்டும் என சிந்திக்க வேண்டும். இந்தியாவை முன்னேற்றுவதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். கோவிட் சர்வதேச பெருந்தொற்று. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற பிரச்னையை யாரும் பார்த்தது கிடையாது.
கோவிட் பரவ துவங்கிய போது, இந்தியாவில் என்ன ஆகும், இதனால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னம்பிக்கை மற்றும் 130 கோடி இந்தியர்களின் முயற்சியால், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது. பெருந்தொற்று காலத்தில், இந்தியா தலைமைப்பண்புடன் செயல்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது.
தற்போது இந்தியாவின் பெருமையை அனைவரும் புகழ்கின்றனர். இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு இந்தியரும் இந்த தடுப்பூசியை எடுத்து கொண்டனர். 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம். முன்கள பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன. கிராமங்களில் வசிக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு, ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் கூட்டாட்சி அப்படியே வலுவாக உள்ளது. சிலர், தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். சில அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டாக தங்களது முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டியுள்ளனர். இது நாட்டிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சுயநலத்திற்காக அவர்களின் விளையாட்டையும் பார்த்துள்ளோம். இந்திய தடுப்பூசிகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனர். சிலர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவிட் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்த போது, தடுப்பூசி குறித்து முழு திட்டங்களை விவரிக்க தயாராக இருந்தது. ஆனால், சில கட்சிகள் அந்த கூட்டத்திற்கு வரவில்லை.
வாரிசு அரசியலை தாண்டி
காங்கிரஸ்
எதையும் பார்த்தது இல்லை. இந்தியாவிற்கு வாரிசு அரசியல் பெரிய பாதிப்பாக உள்ளது. இந்தியா 1947 ல் பிறந்ததாக சிலர் எண்ணி கொண்டு உள்ளனர்.ஆனால், ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை மறந்து விட்டனர்.காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால், அவசர நிலை வந்திருக்காது. சீக்கியர்கள் படுகொலை செய்திருக்க மாட்டார்கள். கலவரம் நடந்திருக்காது. மஹாத்மா காந்தியும் காங்கிரஸ் கட்சியை விரும்பவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் என்பதை காங்கிரஸ் கூட்டமைப்பு என பெயர் மாற்றுங்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குஜராத் முதல்வராக இருந்த போது பெரிய நெருக்கடிகளை சந்தித்தேன். காங்கிரசின் மனநிலை அர்பன் நக்சலைட்டுகளைப் போல் இருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா மாநிலம் தனியாக இருக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். சுதந்திரத்திற்குப் பிறகும் 15 ஆண்டுகள் கோவா பகுதி கஷ்டப்பட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.