லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம், மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் முன்னணி கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இன்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தற்போது முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
சமாஜ்வாதி வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்:
* கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
* ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
* மாநிலம் முழுவதும் உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்.
* பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்
* கிசான் பஜார் (விவசாய சந்தை) விரிவுபடுத்தப்படும்.
* ஒவ்வொரு மண்டலத்திலும் உணவு பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும்.
* நவீன விவசாயத்துடன் கிராமங்களை இணைக்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
* வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்.
* இரண்டு ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச உரங்கள் வழங்கப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு 15 நாட்களில் பணம் வழங்க நடவடிக்கை.
* பயிர்களுக்கு காப்பீடு செய்வதுடன், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
* வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
* ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டு வரப்படும்.
* கல்வித் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பப்படும்.
* வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு.
* எல்கேஜி முதல் முதுநிலைப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
* 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும்.
* கல்லூரி செல்பவர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்கள்.
* ‘கன்யா வித்யா தன்’ திட்டம் மீண்டும் தொடங்கப்ட்டு, இதன் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும்.
* 12ம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
* இரு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு மாதந்தோறும் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.
* ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாதந்தோறும் 6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 கிலோ சிஎன்ஜி கேஸ் இலவசம்.
* ‘சமாஜ்வாதி ஓய்வூதியம்’ மீண்டும் தொடங்கப்பட்டு முதியவர்கள், ஏழைப் பெண்கள் மற்றும் வறுமை நிலை பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.18,000 வழங்கப்படும்.
* சமாஜ்வாதி மளிகை கடைகள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு சலுகை விலையில் பொருட்கள் வாங்க ஏற்பாடு.
* அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் இலவச வைஃபை மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.
* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இலவச ஹெல்ப்லைன் டயல் 1890 என்று தொடங்கப்படும்.
* பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.
இதுபோன்று பல்வேறு வாக்குறுதிகள் சமாஜ்வாதி கட்சியால் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.
வாசிக்க > ‘லவ் ஜிகாத்’துக்கு 10 ஆண்டு சிறை, இலவசமாக ஸ்கூட்டர், 2 சிலிண்டர் – உ.பி பாஜக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள்