வெள்ளிக்கிழமை (இன்று) முதல் பப்ஜி மொபைல் மற்றும் மொபைல் லைட் வடிவங்கள் இந்தியாவில் வேலை செய்யாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பப்ஜியின் உரிமையாளர்களான டென்செண்ட் கேம்ஸ், இந்த நிலைக்கு வருந்துவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பப்ஜி மொபைல், மொபைல் லைட் ரசிகர்கள் தந்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.
முன்னதாக தனது அறிக்கை ஒன்றில், “பயனரின் விவரங்களைப் பாதுகாப்பாதே எங்களின் முதல் முக்கியத்துவமாக இருந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் தரவுகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் வரையறைகளுக்கு என்றுமே உட்பட்டிருக்கிறோம். பயனர்களின் விளையாட்டு பற்றிய தகவல்களை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது, எங்கள் கொள்கைகளில் உள்ளதைப் போல வெளிப்படையான முறையிலேயே கையாளப்பட்டது” என்று டென்செண்ட் கேம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
செப்டம்பர் 2 ஆம் தேதி பப்ஜி விளையாட்டைத் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் இந்தத் தடை கொண்டு வரப்பட்டது. டென்செண்ட் கேம்ஸுடனான தங்கள் கூட்டைத் திரும்பப் பெறுவதாகவும், இந்திய அரசாங்கத்துட்ன இணைந்து உடனடித் தீர்வு காணவிருப்பதாகவும் பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பப்ஜி ஆட்டத்தை சர்வதேச அளவில் 5 கோடி பேர் விளையாடுகின்றனர். இதில் இந்தியாவில் மட்டுமே 3.3 கோடி பயனர்கள் இருக்கின்றனர். இந்த வருடத்தின் முதல் பாதியில் பப்ஜி மொபைல் மூலம் அந்நிறுவனத்துக்குக் கிடைத்த வருமானம் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.9,731 கோடி. இதுவரை பப்ஜி ஆட்டத்தின் மூலம் ரூ.22,457 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவில்தான் இந்த விளையாட்டை அதிகமாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் 17.5 கோடி முறை இந்த விளையாட்டைப் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
பப்ஜியின் தடையால், இந்தியாவில் என்கோர் என்கிற நிறுவனம், ஃபவுஜி என்கிற அதேபோன்ற விளையாட்டை உருவாக்கி வருகிறது. அடுத்த மாதம் இந்த விளையாட்டு வெளியாகவுள்ளது.