திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியில் 65 வார்டுகள், 5 நகராட்சிகளில் 120 வார்டுகள், 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் என மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படவிருந்தது. இதனிடையே, திமுகவைச் சேர்ந்த துறையூர் நகராட்சி 10 வது வார்டில் முரளி, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டில் கருணாநிதி, தொட்டியம் பேரூராட்சி 13 வது வார்டில் சத்யா ஆகிய 3 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், பிப்.19-ம் தேதி 398 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சம் வேட்பாளர்கள் 16 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். இதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட வேண்டிய நிலை வரும் பட்சத்தில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்படும்.
அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 47 மற்றும் 54 ஆகிய 2 வார்டுகளில் வேட்பாளர்கள் தலா 18 பேர் போட்டியிடுகின்றனர். எனவே, இந்த இரு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கடுத்து, 20 வது வார்டில் 16 பேரும், 28 வது வார்டில் 15 பேரும், 34 வது வார்டில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக 1, 3, 9, 32, 44, 50 ஆகிய 6 வார்டுகளில் தலா 5 பேரும், 7, 8, 24, 42, 62, 64 ஆகிய 6 வார்டுகளில் தலா 6 பேரும் களத்தில் உள்ளனர்.