சிவமொக்கா:
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில், கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர்.
ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.
அந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி இல்லை. அதனை நீக்கி விட்டு காவி கொடியை ஏற்றவும் இல்லை. அவர்கள் காவி கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றினர். அதன்பின்பு அவர்களே அந்த கொடியை கீழே இறக்கி விட்டனர் என அவர் கூறியுள்ளார்.
அனைவரும் மாணவர்கள் என்பதால் போலீசார் மிகவும் பொறுமையாக நடந்து கொண்தாகவும், ஆனால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் ஸ்.பி. லட்சுமி பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், பிப்ரவரி 1 ஆம் தேதி வரை முழு சூழ்நிலையும் கட்டுக்குள் இருந்தது, சில அரசியல் கட்சிகள் தூண்டிய போதுதான் சமூகத்தின் மற்ற பிரிவினரிடமிருந்தும் எதிர்வினை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…ஹிஜாப் விவகாரம் – மாணவர்கள் அமைதி காக்க கர்நாடக உயர்நீதிமன்றம் வேண்டுகோள்