புதுடெல்லி,
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை.
நாகலாந்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி பறி போனது. ஒடிசவில் 27 ஆண்டுகளுக்கு முன்பு போய்விட்டது. திரிபுரா, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளுக்கு முன்பே போய் விட்டது. தெலுங்கானாவை உருவாக்கியதற்கு நீங்கள் பெருமை கொள்கிறீர்கள். ஆனால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
கொரோனா முதல் அலையின் போது காங்கிரஸ் கட்சி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக ரெயில் டிக்கெட்டுகள் கொடுத்தது. அதே நேரத்தில், தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்லலாம். பேருந்து வசதி செய்து தரப்படும் டெல்லி அரசு கூறியது. இதன் விளைவாக பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவியது.
ஊழல் செய்ய முடியவில்லை என்பதால் சிலருக்கு மேக் இன் இந்தியா திட்டம் என்றால் பிடிக்கவில்லை. பாதுகாப்புத் துறையில் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க நாங்கள் முயற்சி செய்துள்ளோம்” என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று தனது உரையில் காங்கிரஸ் குறித்து கடுமையாக சாடியுள்ளார்.