Freedom convoy: தகிக்கும் கனடா.. அமெரிக்க எல்லை முடக்கம்.. ஸ்தம்பித்தது போக்குவரத்து!

கனடாவிலிருந்து
அமெரிக்கா
செல்வோர் கட்டாயம்
கொரோனா தடுப்பூசி
போட வேண்டும் என்ற
கனடா
பிரதமர்
ஜஸ்டின் ட்ருடியூ
பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அங்கு நடந்து வரும் லாரி டிரைவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

டெல்லி விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம் போல இந்த போராட்டம் வீரியம் அடைந்து வருகிறது. லாரி டிரைவர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் கனடா – அமெரிக்க எல்லையை முற்றுகையிட்டுள்ளதால் அந்த மார்க்கமாக சாலைப் போக்குவரத்தும் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

கனடாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கனடா பிரதமர் உத்தரவிட்டார். இதற்கு டிரக் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்பூசியைக் கட்டாயமாக்கக் கூடாது என்று கூறி அவர்கள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்தினர், விவசாயிகள் என பலரும் இணையவே போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.

ஒட்டாவா நகரில் ஆயிரக்கணக்கானோர் கூடி டிரக்குகளுடன் முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஒட்டாவா நகரம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் கனடா அரசும், காவல்துறையும் திணறி வருகின்றன. பிரதமர் ஜஸ்டினுக்கு இந்தப் போராட்டம் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசியவர் ஜஸ்டின். இன்று அதே போன்றதொரு போராட்டத்தால் அவர் திணறிப் போய் நிற்கிறார்.

ஒட்டாவா நகரில் கிட்டத்தட்ட 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் தங்களது வாகனங்களில் தொடர்ந்து ஹார்ன் அடித்து நூதனமாகவும் போராடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள், மருத்துவமனைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்டாரியோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தற்போது போராட்டம் கனடா – அமெரிக்கா எல்லைக்கும் பரவியுள்ளது. அமெரிக்கா செல்லும் நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு டிரக்குகளை தாறுமாறாக நிறுத்தியிருப்பதால் எந்த வாகனமும் போக முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.