பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தரவுகள் ஏதும் இல்லாத அரசு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடி உள்ளார்.
நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடர்
, கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸை ‘துக்டே துக்டே கும்பல்’ (சிறு சிறு கும்பல்கள்) என்று வசைபாடுகிறார். ஆனால், எதிர்க்கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவரது அரசிடம் தரவுகள் இல்லை. கடந்த காலங்களில் அந்த சிறு சிறு கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என கேள்வி எழுப்பிய போது, தரவுகள் இல்லை என பாஜக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சரும் தெரிவித்தார்.
சிறு சிறு கும்பல்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள், நதிகளில் கிடக்கும் உடல்கள், புலம் பெயர்ந்தோர் சொந்த ஊர் திரும்பியது என எது பற்றிய தரவுகளும் இந்த அரசிடம் இல்லை. தரவுகள் ஏதும் இல்லாத அரசு இந்த அரசு
NDA
(என்.டி.ஏ) அரசு என்றால் ‘No Data Available’ (தரவுகள் இல்லா) அரசு.
காங்கிரஸ் இல்லாவிட்டால், இந்த மாளிகை இன்னும் இந்திய அரசுச் சட்டம் 1919-இன் கீழ் இளவரசர்களின் சபையாக இருந்திருக்கும். எங்களுக்குப் பதிலாக அதிகாரத்துவமிக்க ஆட்சியாளர்கள் அமர்ந்திருப்பார்கள்; ராணி இரண்டாம் எலிசபெத்தைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். மாநிலங்களவை என்ற ஒன்று இருப்பதால் நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் அமைப்புக்காக கடவுளுக்கு நன்றி.
எனக்கு இந்த பட்ஜெட்டில் மிகவும் பிடித்த விஷயம் குறைந்த நேரத்திலே பட்ஜெட் உரை முடிந்து விட்டது. நிதி அமைச்சருக்கு நன்றி. 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியெனில் ஆண்டுக்கு 12 லட்சம் வேலைவாய்ப்பு. ஆண்டுக்கு 47.5 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாக சேருகின்றனர். மற்றவர்கள் என்ன செய்வார்கள்? பக்கோடா வறுத்து விற்க வேண்டும்.
முதலீட்டைத் திரும்பப் பெறுவதில், இலக்கு ரூ. 1,75,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது சரியானது அல்ல என்று எச்சரித்திருந்தேன். எங்களின் எச்சரிக்கையை ஏற்று, இலக்குக்கு எதிராக ரூ.78,000 கோடியை மட்டுமே வசூலித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.