பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும், அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சன்னியை அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.
இந்த நிலையில், நவ்ஜோத் சித்து என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸில் சேர வேண்டும் எனக் குறைந்தது 60க்கும் மேற்பட்ட முறை பிரசாந்த் கிஷோர் என்னைச் சந்தித்துப் பேசினார். அந்த சமயத்தில், காங்கிரஸ் 30 முதல் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற இயலும். நான் அந்த கட்சியில் சேர்ந்தால் இன்னும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்’ எனக் கூறினார்.
Also Read: பஞ்சாப் கருத்துக்கணிப்புகளில் முந்தும் ஆம் ஆத்மி: அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை வளர்த்தது எப்படி?
மேலும், “ஆம் ஆத்மி கட்சியும் எனக்கு அழைப்பு விடுத்தது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது எனக்கு மக்களவை, மாநிலங்களவை எம்.பி சீட்டுகளைக் கொடுக்க மறுத்தார். தேர்தல் பிரசாரத்தில் மட்டும் ஈடுபடுமாறு கூறினார். இந்த நிலையில்தான் ராகுல் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் காங்கிரஸ் கட்சியில் இணையக் காரணமானவர் ராகுல் காந்தி மட்டும்தான். அவருக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன்” என்று கூறினார்.