சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலையூரில் நடந்த பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார்.
தமிழகத்தை நமது ஆட்சியில் தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றினோம். முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
அவரது வழியில் நான் 2019-ம் ஆண்டு தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை பெற்றேன். இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
நாம் கொண்டு வந்த திட்டங்களைத்தான் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திறமை இல்லாத முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த சிறப்பு நமக்கு எப்போதும் உண்டு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. வெற்றியை தடுக்க சதி நடக்கிறது. அதனை முறியடித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
மேயர் பதவிகளில் அ.தி.மு.க.வினரே அமரும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.